புதன், 28 அக்டோபர், 2009

செட்டிப்புலத்தில் தலித் மக்கள் ஆலயப்பிரவேசம்


செட்டிப்புலம் சிவன் கோயிலில், செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர், ச.முனியநாதன் தலைமையில், தலித் மக்கள் பெண்கள் 60, ஆண்கள் 30 பேர்ஆலயப்பிரவேசம் செய்து வழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வின் போதுநாகை மாவட்ட எஸ்.பி.மகேஸ்வர் தயாள், திருவாரூர் எஸ்.பி. பிரவீன் குமார் அபிநபு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அண்ணாதுரை, நாகை கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன், நாகை டிஎஸ்பி டி.கே.நடராஜன், வேதாரண்யம் டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சியர் தலைமையில் தலித் மக்களுடன் அதிகாரிகளும் கோவிலின் உள்ளே சென்றபோது, ஊராட்சி ஒன்றியத் துணைத்தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ம.சந்தோசம், கோயில் நிர்வாகி ரெத்தினசாமி, அதிமுக விவசாய அணித்தலைவர் ராமமூர்த்தி, ஆசிரியர் ஆர்.நாக்யன், பிர்கா சர்வேயர் டி.சுப்பிரமணியன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். செட்டிப்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனும் வந்து கலந்து கொண்டார்.தலித் மக்கள் கொண்டுவந்த தேங்காய், வாழைப்பழம், பூ ஆகியவற்றைக் கோயில் குருக்கள் பெற்று அர்ச்னை செய்து அனைவருக்கும் திருநீறு அளித்தார். தலித் மக்கள் மன மகிழ்வோடு வழிபாடு செய்தனர். செட்டிப்புலம் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வர் என்னும் சிவனகோவில் கட்டப்பட்டதிலிருந்து கடந்த 70 ஆண்டுகளாக தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்களால் தற்போது தலித் மக்கள் ஆலய நுழைவும் வழிபாடும் நடந்துள்ளது.ஆட்சியர் உறுதிஇதனைத்தொடர்ந்து சில தலித் இளைஞர்கள் கூறியதாவது, கலவரக்காரர்கள் ஊரில் இல்லாதசமயத்தில் பெரிய பாதுகாப்புடன் எங்களைக் கோயிலுக்குள் அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். இது தொடர வேண்டும் என்றனர். மாவட்ட ஆட்சியாளர் ச.முனியநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இன்றைக்கு என் தலைமையில் தலித் மக்களின் ஆலயப்பிரவேசம் மற்றும் வழிபாடும் நடந்துள்ளது. இதுதொடர்ந்து நடைபெறக் கண்காணிப்போம். கலவரம் செய்த முக்கியக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடரப்படும். பலர், அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு அறிகூட்டுவோம் என்று கூறினார். இந்தக் கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான முயற்சிகளைச் செய்வோம் என்றார் மாவட்ட ஆட்சியர்.தலித் மக்களுக்கு வாழ்த்துகோயில் வழிபாடு செய்து வந்த தலித் மக்களை சிபிஎம் தலைவர்கள் காலனிப் பகுதியில் காத்திருந்து வரவேற்றனர். பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகை மாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், கோவை. சுப்பிரமணியன் ஆகியோர் தலித் மக்களுக்கு வாழ்த்துக்கூறி உரையாற்றினர்.