புதன், 16 டிசம்பர், 2009

வேப்பங்குளத்தில் தொடரும் தீண்டாமைக் கொடுமை

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது டி.வேப்பங்குளம் கிராமம். இங்குள்ள தலித் மக்கள், சமீபத்தில் ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். தலித் மக்கள் ஊரையே காலி செய்து வேறு இடத்தில் குடியேறும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யன் சமாதான கூட்டம் நடத்தி அம் மக்களை அங்கே மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் வேப்பங்குளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சேகர், கே.சாமுவேல்ராஜ், சி.முருகேசன் ஆகியோர் நேரில் சென்று தலித் மக்களைச் சந்தித்தனர்.

அப்போது, உள்ளூர் கடைகளில் தலித் மக்களுக்கு பொருட்கள் வழங்க ஆதிக்க சக்தியினர் தடை விதித்திருப்பதும், குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கூட வழங்கக்கூடாது என்று அவர்கள் தடை செய்திருப்பதும், அதேபோல தலித்துக்களுக்கு வேலை வழங்க மறுப்பதும், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தர மறுப்பதும் என சாதியக் கொடுமை தாண்டவமாடுவது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஞானகுரு ஆகியோர் மாவட்ட ஆட்சியர் சிஜிதாமஸ்வைத்யனை நேரில் சந்தித்து மனுக்கொடுத் தனர்.

தலித் மக்கள் மீதான தீண்டாமைக் கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கையை எடுப்பதுடன், டி.வேப்பங்குளம் தலித் மக்கள் வியாபாரக் கடைகள் துவங்க அரசு கடனுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.