புதன், 16 டிசம்பர், 2009

செய்யூர் அருகே தலித் மக்கள் மீது தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ளது பரசநல்லூர் கிராமம். இங்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வருகிறது.

தேர்தலின் போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏஜெண்டாக இருந்தார் என்பதற்காக ஆதிக்க சாதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலித் மக்கள் கடந்த சில மாதங்களாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.

இதற்கிடையில் தண்டரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தலித் குழந்தைகளை சேர்ப்பதில்லை என்றும் புகார் எழுந்தது.

இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியருக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆதிக்க சாதியினர், தலித் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், அலமேலு (55), உமையாள்(65) ஆகிய இருவர் க்கு பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலித் மக்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ப.சு.பாரதி அண்ணா, வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இல.சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் முனுசாமி, நந்தன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு சார்பில் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இந்த பிரச்சனை குறித்து இரு தரப்பினர் மீதும் செய்யூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதிக்க சாதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் உட்பட 5 பேரையும், தலித் மக்கள் சிலரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே முக்கிய காரணம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியது.

இந்த பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரும் தமிழக அரசும் உடனடி யாக தீர்வு காண வேண்டும் என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.