புதன், 16 டிசம்பர், 2009

உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல்- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

உத்தப்புரத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தலித் மக்கள் பலர் காயமடைந்தனர். அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், உத்தப்புரம் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாக்குதலுக்கு மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொதுத்துறை (சட்டம்-ஒழுங்கு) இணைச்செயலர் ஏ.பி.லலிதா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995-ன்படி, தமிழக முதல்வர் தலைமையில் 26 மாவட்ட ஆட்சியர்களை உறுப்பினராகக் கொண்ட கண்காணிப்புக் குழு 3.8.2006ல் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் நிலுவை குறித்தும், தாக்கியவர்கள் முழு தண்டனை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் 15.9.2009ல் வன் கொடுமை வழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவைக் கூட்டி மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை தொடர்பான அரசிதழ் அறிவிப்பு நகல் அனைத்து காவல் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 23 அரசு வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 29.7.2008 மற்றும் 30.6.2009- ல் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் உத்தப்புரம் தொடர்பாக புகார் ஏதும் வரவில்லை.

மேலும், இதுதொடர்பாக மூன்று மாதத்துக்கு ஒருமுறை சமூகநீதி மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.ஜி. தலைமையில், முதன்மைச் செயலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. (11.12.09 தேதிய நாளிதழ் செய்திகள்)