நாட்டின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியப் பொறுப்பான மத்திய அமைச்சரகச் செயலாளர்கள் பொறுப்பில் ஒரு தலித்துகூட தற்போது இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
இடஒதுக்கீடு சட்டரீதியாகத் தரப்பட்டும் அது முறையாக அமலாவதில்லை என்பது ஒருபுறம். ஒதுக்கீட்டுக்கான போராட்டங்கள் ஒருபுறம். அது முடிந்தவுடன் அதை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டங்களை ஜனநாயக அமைப்புகள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
தாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும், திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக்கட்சிகளும் சொல்லிக் கொள்கின்றன. ஆனால் தலித்துகளின் சமூக, பொருளாதார, அரசியல் நிலையில் பெரும் மாற்றங்கள் தேவை என்ற நிலையே இன்னும் நீடிக்கிறது. மத்திய அரசின் செயலாளர்கள் பொறுப்பில் ஒரு தலித் கூட இல்லை என்ற விபரமும் இதைத்தான் காட்டுகிறது. இந்தப் புள்ளிவிபரத்தையும் அரசுதான் அளித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில் மத்திய அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் இதைத் தெரிவித்தார்.
மத்திய அரசு பணிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 88 செயலாளர்கள், 66 கூடுதல் செயலாளர்கள், 249 இணைச் செயலாளர்கள் மற்றும் 471 இயக்குநர்கள் உள்ளனர். தலைமைப் பொறுப்பான செயலாளர்களில் ஒருவர் கூட தலித்து இல்லை. கூடுதல் செயலாளராக ஒரே ஒருவர் இருக்கிறார். இணைச்செயலாளர்களாக 13 பேரும், இயக்குநர்களாக 31 பேரும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு பேர் செயலாளர்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒருவர் கூடுதல் செயலாளராகவும், ஒன்பது பேர் இணைச் செயலாளர் பொறுப்பிலும் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலை நிலவிவரும் வேளையிலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தலித்துகளுக்கு தரப்பட்டு வரும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்று மத்திய அரசின் தேர்வாணையம் பரிந்துரைகளை அளித்து வருகிறது. நகர்ப்புற பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக தேர்வு முறையை மாற்றுவது பற்றிய பரிசீலனையும் நடந்து வருகிறது. அதன் தலைவராக சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற அகர்வால், பதவியேற்ற நாளிலிருந்தே இத்தகைய வேலைகளில்தான் முனைப்பாக இருந்து வருகிறார்.
- தீக்கதிர் கட்டுரை (19.12.09)