புதன், 23 டிசம்பர், 2009

மதுரை நகர தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் : கள ஆய்வறிக்கை வெளியீடு

மதுரை நகர தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்த கள ஆய்வறிக்கை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று (18.12.09) மதுரையில் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், இக்கள ஆய்வு மதுரை நகரில் தலித் மக்கள் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில், 50 கள ஆய்வாளர்களால் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியியதாவது:

பொய்வழக்கு

நாகமலைப்புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்றதற்காக தலித் பிரிவைச் சேர்ந்த முருகனை ஆதிக்கச்சாதியினர் தாக்கிப் படுகாயப்படுத்தியுள்ளனர். ஆனால் முருகன் மீதே காவல்துறை வழக்குத் தொடர்ந் துள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. முருகன் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும். அவரைத் தாக்கிய ஆதிக்கசாதி வெறியர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித் தொழிலாளர்கள்

மயானங்களில், செருப்பு தைத்தலில், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் தலித் தொழிலாளர்களே ஆவர். மயானப் பணிகள் அரசுப் பணி ளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பணி வரை முறைப்படுத்தப்பட வேண் டும். செருப்பு தைக்கிற தொழிலாளர்களுக்கு நிழற்குடைகள் அமைத்துத்தர வேண்டும். மக்கள் அதிகமாகக் கூடுமிடங்களில் தொழில் செய்வதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்து, கந்துவட்டிக்காரர்களிடமிருந்து மீட்க வேண்டும். துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கு ஷிப்டு முறைக் கல்விக்கு வழிவகை செய்ய வேண்டும். அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் அரசுக் குடியிருப்புகளை உறுதி செய்ய வேண்டும். 3000 துப்புரவுப் பணியாளர்களில் சில நூறு பேருக்கே தற்போது அரசுக் குடியிருப்புகள் உள்ளன. தலித் மக்கள் வாழும் பகுதியில் நிலங்களின் விலை மார்க்கெட் விலையை விட குறைவாக உள்ளதும் சாதி மனோபாவத்தின் வெளிப்பாட்டின் தன்மையாகும்.

சாதிய பாரபட்சங்கள்

மயான வண்டிகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. தண்டல்காரன்பட்டியில் கோவில் வழிபாட்டில் பிரச்சனைகள் உள்ளன. துப்புரவுப் பணிகளுக்கு தலித் அல்லாதோர் நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்கு நடைமுறையில் வேறு பணிகளை ஒப்படைக்கிற நிலை உள்ளது. இப்பிரச்சனைகளை ஆய்வு செய்து அவற்றைக் களைய உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

மதுரையில் 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாய் குடியிருந்து வரும் நிலையிலும் கூட தலித் மக்களுக்கு பட்டா வழங்கப்படாத நிலை பல பகுதிகளில் தொடர்கிறது. மஞ்சள்மேடு, மேலப்பொன்னகரம் மினி காலனி, இந்திரா நகர், சுப்பிரமணியபுரம் பள்ளம், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி காலனி, கீழ்மதுரை சி.எஸ்.ஆர். அரிசனக் காலனி, அனுப்பானடி- அம்பேத்கார் நகர், கரும்பாலை, விராட்டிபத்து கீழத்தெரு, அரசரடி அம்பேத்கார் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் பட்டா கோரிக்கைகள் பல ஆண்டுகளாகப் பரிசீலிக்கப்படாமல் உள்ளன.

சுகாதாரச் சீர்கேடுகள்

கரும்பாலை, பந்தல்குடி, கோமஸ்பாளையம், இந்திராநகர், கோபாலிபுரம், கிருதுமால் வாய்க்கால் கரைகளில் நிலவும் சுகாதாரச் சீர்கேடுகள், தலித் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்குவதாக உள்ளன. சாக்கடையும் கொசுக்களும், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரின் உடல்நலத்திற்கும் பெரும் கேடுகளை விளைவிக்கின்றன.

கிருதுமால் வாய்க்கால் கரையில் துர்நாற்றத்தைத் தடுக்கும் வகையில், மேலவாசல் பகுதியில் தடுப்புச் சுவரை எழுப்ப வேண்டுமென்ற சாதாரணமான கோரிக்கை கூட அரசால் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது. பொதுக்கழிப்பறைகள் மூடப்பட்ட நிலை, கழிப்பறைகளில் தண்ணீர் வசதியின்மை, கட்டணக் கழிப்பறைகளுக்கு கூடுதல் செலவினம், பராமரிப்பு இன்மை ஆகியன பெரும் பிரச்சனைகளாக உள்ளன. குளிப்பதற்கும், துவைப்பதற்கும் ஒரு நபருக்கு ரூ. 8 செலவழிக்க வேண்டுமெனில், மக்களின் அன்றாட வருமானத்தில் பெரும்பகுதியை இழக்க வேண்டியுள்ளது.

தலித் மக்கள் வாழும் பகுதிகள் அரசின் பாராமுகத்திற்கு ஆளாகியிருப்பதன் வெளிப்பாடுகளே இந்த சுகாதாரச் சீர்கேடுகளாகும்.

அரசுத் திட்டங்களில் தாமதம்

முதியோர் பென்சன், கல்வி உதவித் தொகை, ஆதரவற்ற பெண்கள் உதவித் தொகை, கைம்பெண் உதவித் தொகை உள்ளிட்ட பயன்கள் கிடைப்பதில் காலதாமதம் உள்ளதாக புகார்கள் உள்ளன. அரசு நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். அருந்ததியர் பகுதிகளில் அரசுத் திட்டங்கள் குறித்த செய்திகள் சென்று சேராமலேயே உள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உள்ளது. போதுமான குழாய்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. கோபாலிபுரத்தில் ஒரு பகுதி, மின்விளக்குகள் இன்றி இருண்டு கிடக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் போதுமான மருந்துகள் இல்லை. மருத்துவர்களின் வருகையும், கவனிப்பும் உறு ப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மதுரையின் பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள தெருப்பெயர்களை நீக்க வேண்டும். பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருந்தாலும்கூட தலித் மக்களுக்கு மதுரை நகரில் வீடு வாடகைக்கு வழங்கப்படுவதில்லை.

போராட்டம்

தலித் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகான அரசு நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் முயற்சிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு பி.சம்பத் தெரிவித்தார்.

இக்கோரிக்கைகளை முன்வைத்து, டிசம்பர் 25-ம் தேதி, 44 பேர் உயிரோடு எரித்து கருக்கப்பட்ட கீழ வெண்மணி தியாகிகள் வீரவணக்க நாளன்று, தீண் டாமை ஒழிப்பு முன்னணியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்களும் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை மதுரை காளவாசல் அருகே நடத்த உள்ளன என்றும் அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராசு, இணைஅமைப்பாளர்கள் இரா. இராசகோபால், எஸ்.கே.பொன்னுத்தாய், தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன், மதுரை மாநகர்-புறநகர் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஜா.நரசிம்மன், உமாமகேஸ்வரன், வை.ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.