தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பினர், வெண்மணித் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் சிறப்புக் கூட்டம், திருவாரூரில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயுள் மற்றும் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் எம்.குன்னிகிருஷ்ணன் தலைமை வகித்தார். தஞ்சை கோட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.புண்ணிய மூர்த்தி வரவேற்றார்.
கோவை கோட்ட சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொடங்கி இருக்கும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் பணிகள் பற்றி குறிப்பிட்டார். விரைவில் இதேபோன்ற மையத்தைச் சென்னையிலும் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் சாமுவேல்ராஜ், முன்னணி மேற்கொண்டுள்ள இயக்கங்களை பட்டியலிட்டார். இதில் இன்சூரன்ஸ் ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் அ.சவுந்தரராசன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வெண்மணி மண்டல கட்டடப் பணிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்களின் நிதியாக ரூ. 2 லட்சம், அ.சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
ராமகிருஷ்ணன் (பொது இன்சூரன்ஸ்) நன்றி கூறினார். கூட்டம் முடிந்ததும் அனைவரும் கீழவெண்மணி சென்று தியாகிகள் ஸ்தூபிக்கு வீரவணக்கம் செலுத்தினர். தென்மண்டல தலைவர் குன்னி கிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.