திங்கள், 11 ஜனவரி, 2010

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க போலீசார் தடை : வாலிபர் சங்கத்தினர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் தலித், முஸ்லிம், கிறிஸ்தவ, ரெட்டியார் சமூகங்களை சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. ஊராட்சி அலுவலகம், நூலகம் மற்றும் கட்சிக் கொடிகம்பங்கள் உள்ள அரசு இடத்தில் சிலை நிறுவப்பட்டது.

எனினும், அங்குள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர், அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இச்சிலைக்கு மாலை அணிவிக்கவும் விடமாட்டோம் என்றும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்பிரச்சனையை தீர்க்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளான டிசம்பர் 25, 2009 அன்று, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போராட்டத்தை வாலிபர் சங்கம் அறிவித்தது.

இப்பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறிப்பிட்ட சமூகத்தினரின் பிடிவாதத்தால் தோல்வி அடைந்தது. எனவே, போராட்டம் நடந்தே தீரும் என வாலிபர் சங்கத்தினர் கூறினர்.

இந்நிலையில் பழையபட்டினம் கிராமத்திற்குள் செல்லும் சாலைகள் அனைத்துக்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது. கிராமத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக் கவில்லை. விருத்தாசலத்தில் இருந்து பழையபட்டினம் கிராமத்திற்கு செல்லும் சாலைகளையும் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் கண்காணித்தனர்.

கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பா ளர், அதிரடிப்படையினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாலிபர் சங்கத்தினர் வாகனங்களில் பாதிதூரம் வரை வந்து, வாகனத்தில் இருந்து இறங்கி முந்திரிக் காடுகள் வழியாக நடந்தே போராட்டக் களத்திற்கு விரைந்தனர்.

“அம்பேத்கருக்கே தீண்டாமையா? என்ற முழக்கத்துடன் பழையபட்டினம் அம்பேத்கர் சிலை அருகே விரைந்த வாலிபர் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதைத் தொடர்ந்து சங்கத்தினர் இரண்டு மணிநேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்கத்தை சேர்ந்த 200 பேரும், தலித் மக்கள் 300 பேரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட னர்.

காவல்துறை அதிகாரிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அரசு தடைவிதித்துள்ளது; அதனால் மாலை அணிவிக்க முடியாது என்றனர். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் என்ன தீவிரவாதியா? எல்லோருக்கும் பொதுவானவர்தானே என்று வாலிபர் சங்கத்தினர் கேட்க அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பொன்.சோமு தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன், மாவட்டச் செயலாளர் கே.ராஜேஷ் கண்ணன், பொருளாளர் வி.ராமகிருஷ்ணன், துணை செயலாளர் பி.வாஞ்சி நாதன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் வி.சிவஞானம் உள்ளிட்டோர் கைதாகினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே. கந்தசாமி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஏ.சந்திரசேகரன் ஆகியோரை வழியிலேயே கைது செய்தனர். வாகனத்தில் வாலிபர் சங்கத்தினர் வந்ததால் 3 வாகனங்களை பறிமுதல் செய்து, 3 ஓட்டுநர்களையும் கைது செய்தனர்.

பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் வாலிபர்களை திரட்டி இப்போராட்டத்தை மீண்டும் நடத்துவோம் என்று வாலிபர் சங்கம் அறிவித்துள்ளது.