திங்கள், 11 ஜனவரி, 2010

நாமக்கல் அருகே வாலிபர் சங்கப் போராட்டம் வெற்றி


வெண்மணி தியாகிகள் தினமான டிசம்பர் 25 வெள்ளியன்று தீண்டாமை கொடுமைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இதையொட்டி திருச்செங்கோடு அருகே கொக்கராயன்பேட்டையில் வாலிபர் சங்கத்தினர் தலைமையில் தலித் மக்கள் வெள்ளியன்று எழுச்சியுடன் ஆலயம் நுழைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பள்ளிபாளையம் அருகே இருப்பது, கொக்கராயன் பேட்டை. இங்கு பழைமை வாய்ந்த பிரம்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள போதிலும், தலித் மக்கள் கோவிலினுள் சென்று வழிபட முடியாத நிலை இருந்தது. ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்து வந்தனர். இந்த அநீதியை முடிவுக்குக் கொண்டுவர, தலித் மக்களுடன் ஆலயத்திற்குள் நுழைவோம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 21.12.2009- அன்று வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில், அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் ஆலய நுழைவுப்போராட்டம் நடத்த ஒத்துழைப்பு தருவ தாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து வெண்மணி நினைவு தினத்தன்று வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு தலைமையில் ஆலய நுழைவு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், எம்.அசோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சி.துரைசாமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் ந.வேலுசாமி, எஸ்.சுரேஷ், இ.கோவிந்தராஜ் மற்றும் திரளான தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழைந்து வழிபாடு செய்தனர். போராட்டத்தையொட்டி கொக்கராயன்பேட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், தலித்துக்கள் கோயிலுக்குள் நுழைய ஏற்பாடு செய்த வருவாய்க் கோட்டாட்சியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்டனம்

இச்செயலுக்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தலித் மக்களை பயமுறுத்தும் வகையில் ஆதிக்க சக்தி யினர் அராஜகமாகப் பேசியதையும், இதனால் தலித் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதை காவல்துறை கணக்கில் கொண்டு தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.