1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியின் விவசாயத் தொழிலாளர்கள், அரைப்படி நெல் கூலியாக உயர்த்திக் கேட்டதாலும், தங்கள் குடிசைகளில் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்ததாலும், அதிகார வர்க்கத்தின் ஆணவம் பிடித்த நிலப்பிரபுத்துவக் கொடியவர்கள் கீழவெண்மணியை ரணகளமாக்கினார்கள். 44 பேரை ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.
உலக வரலாற்றில் நெஞ்சை உலுக்கும் கறுப்புக் கறைபடிந்த நாள் டிசம்பர் 25. அந்த வெண்மணி வீரத் தியாகிகளின் 41-ஆம் ஆண்டு நினைவு தின வீர வணக்க நாள் நிகழ்ச்சிகள் வெண்மணியில் வெள்ளிக்கிழமையன்று எழுச்சியுடன் நடை பெற்றன.
தலைவர்கள் மலரஞ்சலி
வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.முரு கையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் செங்கொடியை எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே ஏற்றி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, என்.வரதராஜன், மத்தியக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் கோ.வீரய்யன், சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.லாசர், விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், நாகை சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு, தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி. நீலமேகம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் கோ.பழனிச்சாமி, நாகை மாவட்டச் செயலாளர் எம்.செல்வராஜ், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் பி.பத்மாவதி ஆகியோர் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து, நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.தம்புசாமி, நாகை மாலி, பி.வைரன், எம்.நடராஜன், வி.சுப்பிரமணியன், கோவை.சுப்பிரமணியன், டி.கணேசன், ஜி.கலைச் செல்வி, மாவட்ட ஊராட் சித் தலைவர் ஜி.ஜெயராமன், தலைஞாயிறு ஒன்றியப் பெருந்தலைவர் வி.அமிர்தலிங்கம், கீழ்வேளூர் ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.செல்லையன், கீழையூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லிகா சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஜோ.ராஜ்மோகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், பா.சரவணத்தமிழன், சாம்ராஜ், நாகை மாவட்டச் செயலாளர் வி.சிங்காரவேலு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் அருளரசன், எழுத்தாளர் சங்கத் தலைவர்கள் சோலை.சுந்தரப் பெருமாள், எல்.பி.சாமி, ந.காவியன், பி.செல்வராஜ், சிபிஎம் நாகை மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் திரளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.
நூல் வெளியீடு
தீக்கதிர் செய்தி ஆசிரியர் மயிலை பாலு எழுதிய ‘நின்று கெடுத்த நீதி’ (வெண்மணி வழக்கு - பதிவுகளும் தீர்ப்புகளும்) என்னும் நூலை மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட மத்தியக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
முனைவர் செ.த.சுமதி எழுதிய ‘வெண்மணிப் படுகொலைகள்’ (வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்) என்னும் நூலை கோ.வீரய்யன் வெளியிட, அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். இரு நூல்களையும் வெளியிட்ட ‘அலைகள்’ பதிப்பக உரிமையாளர் ‘அலைகள்’ சிவத்தை நாகை மாலி அறிமுகம் செய்து வைத்தார்.
நிறைவாக மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், இரு நூல்களையும் பற்றி உரையாற்றுகையில் இந்த இரு நூல்களும் வெண்மணியின் வரலாற்றுப் பொக்கிஷங்கள். இந்த வெண்மணி தியாக வரலாறுதான் நாளைய தேசத்தின் வரலாற்றை மாற்றப் போகிறது என்று குறிப்பிட்டார். சிபிஎம் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம்.காத்தமுத்து நன்றி கூறினார்.
திங்கள், 11 ஜனவரி, 2010
வெண்மணி தியாகிகளின் நினைவுநாள் : சிபிஎம் தலைவர்கள் வீரவணக்கம்
லேபிள்கள்:
நூல்வெளியீடு,
மலரஞ்சலி,
மார்க்சிஸ்ட் கட்சி,
வீரவணக்கம்,
வெண்மணி