திங்கள், 11 ஜனவரி, 2010

சங்கடம் வேண்டாம்; சமத்துவம் வேண்டும் - பி.சம்பத்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், டிசம்பர் 25 வெண்மணித் தியாகிகள் நினைவு தினத்தன்று ஆலய நுழைவு உட்பட தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளுக்கு அறைகூவல் விடுத்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. வாலிபர் சங்கத்தின் இப்போராட்ட அறைகூவலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர், பத்திரிகை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தான் பெங்களூர் சென்று ஓரிரு நாட்களில் திரும்ப இருப்பதாகவும் அவ்வாறு திரும்பிய பிறகு அனைத்து அரசியல் கட்சிகளோடும் கலந்துபேசி ஆலய நுழைவு உட்பட தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் இத்தகைய முயற்சிகள் இல்லாத சூழலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள நடவடிக்கை தேவையானது என்பதையும், அதனை அவர் அவசியம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறோம். வர்க்க லாபம், குறுகிய அரசியல் ஆதாயம், வாக்கு வங்கி நோக்கங்களுக் காக சாதியமைப்பை பாதுகாத்து அவ்வப்போது சாதி உணர்வுகளை விசிறி வந்துள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கட்சிகள் அனைத்தும் தங்களது தவறான பாதையைக் கைவிட்டு தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

ஆனால் முதல்வர் தனது அறிக்கையில் மேற்கண்ட அறிவிப்போடு மட்டும் நிறுத்தவில்லை. அவரது அறிக்கையில் கீழ்க்கண்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

“ஆண்டவனுக்கு அருகே நின்று அவனுக்கு பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத்தந்துள்ளது. சாதி-மத வேறுபாடுகளுக்கு சந்தனம் பூசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டம் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்து, ஆட்சி நடத்தும் நமக்கு சங்கடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அல்ல என்று அந்தக் கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என்று இப்போது திடீரென நினைத்துக் கொள் பவர்கள் போல ஆலயங்கள் சிலவற்றில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது தேவைதானா என்பதைச் சிந்தித்து ஒருமித்த கருத்தோடு ஒழித்திடுவோம் சாதி-மத வேற்றுமையை என ஓரணியில் திரண்டு நின்று ஒலித்திடுவதே வன்முறைக்கு வழிவகுக்காத நன்முறையாகும்.”

சுற்றிவளைத்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் அவர் அமைத்திருந்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காமல் இல்லை. ஆலய நுழைவு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை வாலிபர் சங்கமும், இடதுசாரி இயக்கங்களும் திடீரென நினைத்து நடத்திக் கொண்டிருப்பது போலவும், தமிழ்நாடு அரசாங்கத்திற்கு சங்கடம் ஏற்படுத்துவது அதன் நோக்கம் போலவும் முதல்வரின் அறிக்கை அர்த்தப்படுத்துகிறது. இடதுசாரிகள் வர்க்கப் போராட்டம் மட்டுமே நடத்துவதாக வக்கனை பேசி விட்டு, தாங்கள் மட்டுமே சமூக நீதிக்காகப் போராடி வருவதாக முரசொலி ஏடும், திமுகவின் சில தலைவர்களும் பேசிவருவது நாம் அறியாததல்ல. அதனால்தான் இடதுசாரிகளை திடீரென நினைத்துப் போராடுவதாக கலைஞர் சாடுகிறார்.

பெரியார் சமூக நீதியிலும் தீண்டாமை ஒழிப்பிலும் காட்டிய அக்கறையை நாம் என்றும் மறுத்ததில்லை. ஆனால் அவர் வழிவந்ததாக பறைசாற்றும் திமுகவும், நம் தமிழ்நாடு அரசும் தீண்டாமை ஒழிப்பில் உரிய அக்கறை காட்டவில்லை என்பதே நமது குற்றச்சாட்டு. கீழவெண்மணி படுகொலை மட்டுமல்ல, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் படுகொலை, காங்கியனூர் தடியடித் தாக்குதல் போன்றவை நடந்ததும் திமுக ஆட்சியில்தான். உத்தப்புரம் சுவர் இடிப்பு, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, ஆலய நுழைவுப்போராட்டங்கள் போன்ற பல போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்கள் நடத்திய போது தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு ஏற்படுத்தியது உண்மையும், வரவேற்கத் தகுந்ததும்தான்.

ஆனால் இவையெல்லாம் போராட்டங்கள் உருவாக்கிய சூழலிலும் நிர்ப்பந்தத்திலும் நடந்தன என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இடதுசாரிகளின் இப்போராட்டங்கள் எல்லாம் திடீரென நினைத்து நடந்தவையல்ல. மாறாக விடுதலைப்போராட்ட நிகழ்வுகள், நீடித்த நிலப்போராட்டங்கள், வெண்மணி தியாகம், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடந்த விவசாய இயக்கப் போராட்டங்களின் தொடர்ச்சியே இவை என்பதை தமிழக மக்கள் மட்டுமல்ல, கலைஞரும் அறிவார். திமுகவையும் இதர சில முதலாளித்துவ அரசியல் இயக்கங்களையும் போல், ஆளும் வர்க்கங்களுக்குத் துணைபோகும் வகையில் சாதி ஒடுக்குமுறையை வர்க்க ஓடுக்குமுறையிலிருந்து பிரித்துப் பார்க்கும் இயக்கம் அல்ல செங்கொடி இயக்கம். மாறாக சேர்த்துப் பார்க்கும் இயக்கம். இப்பார்வையிலும் பாதையிலும் வர்க்க, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இனியும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். எனவே தற்போது நடத்தப்பட்டுவரும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களுக்கு வேறு விதமான நோக்கத்தையும், நியாயத்தையும் கற்பிப்பதை திமுகவும், கலைஞரும் கைவிடுவது நல்லது.

அது இருக்கட்டும். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை திமுக அரசுதான் கொண்டுவந்தது என்றும் அதன்மூலம் தலித் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை இருப்பதாகவும் கலைஞர் கூறுகிறார். அந்த ‘சட்டப்பூர்வ உரிமை’யை நாம் மறுக்கவில்லை. ஆனால் அது ‘செயல்பூர்வமான உரிமை’யாக இருக்கிறதா?என்பதுதான் கேள்வி. இச்சட்டம் வந்தபிறகு தலித்துகள் பல ஆலயங்களில் அர்ச்சகராக முடிந்ததா? இல்லையே. ஆலயத்திற்குள் நுழைய தலித்துகளை அனுமதிக்காதபோது அர்ச்சகராக்க ஆதிக்க சக்திகள் எப்படி அனுமதிப்பார்கள்? தற்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பயிற்சிப்பள்ளிகள் நடைபெறுகின்றனவா? எனவே சட்டப்பூர்வ உரிமைகளைப் பற்றி பேசிப் பலனில்லை. தலித்துகளுக்கும் எல்லாவிதமான சம உரிமைகளையும் அரசியல் சாசனமும் சட்டங்களும் வழங்குகின்றன. ஆனால் நடைமுறையில் இதனை தலித்துகள் பெற முடிந்ததா என்றால், இல்லை.

எனவே, தான் மட்டுமே சரியான முறையில் செயல்படுவதாகவும் மற்றவர்கள் செயல்பாட்டில்தான் கோளாறு இருப்பது போன்ற கருத்துக்களை கலைஞரும் திமுகவும் கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தீண்டாமை ஒழிப்புக்கு அரசுத் தரப்பில் உணர்வுப்பூர்வமாக முயற்சியும் மற்ற இயக்கங்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கும்போது துணை நிற்பதுமே இன்றைய தேவையாகும். தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டங்கள் அல்ல, மாறாக சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களேயாகும்.