திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் கொடுவாய் கிராமத்தில் தலித் மக்களுக்கு முடிதிருத்த மறுத்து தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் சலூன் கடையை வாலிபர் சங்கத்தினர் ஆவேசத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி என்ற தலித் வாலிபர் அங்கு முடி திருத்தச் சென்றுள்ளார். அப்போது கடையில் யாரும் இல்லை. இருந்த போதிலும் சுப்பிரமணி தலித் என்ற காரணத்திற்காகவே அவருக்கு முடி திருத்த மறுத்துள்ளனர். இந்த இழிவை முடிவுக்குக் கொண்டுவர, வெண்மணி தியாகிகளின் வீரவணக்க நாளையொட்டி, அக்கடையை முற்றுகையிட்டு வாலிபர்கள் போராட்டம் நடத்தினர். வாலிபர் சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏராளமான தலித் இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முருகேஷ் தலைமை வகித்தார். வாலிபர் சங்க தலை வர்கள் ஆர்.காளியப்பன், எஸ்.முத்துகண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.ராம மூர்த்தி, என்.ஆறுமுகம், பி.மோகன், வடிவேல், மணவாளன், லோகநாதன், ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்ப்பு மறியல்
இந்நிலையில், ஆதிக்க சக்தியினரை தனிப்பட்ட முறையில் திரட்டிய மேற்படி சலுன் கடைக்காரர், அவ்வூரில் உள்ள இதர சலூன் கடைகளையும், பிற கடைகளையும் அடைக்கச் செய்து, வாலிபர் சங்கத்தினரை கைது செய்யக் கோரி திடீர் மறியலை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அரசு நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது.
போராட்டங்கள் வெற்றி
இது தவிர ஈரோடு மாவட் டம் நசியனூர், கோவை மாவட்டம் புளியகுளத்தில் சமுதாயக்கூடம் திறப்பு, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியம் நல்லமநாயக்கன்பட்டியில் முடிதிருத்தப் போராட்டம் போன்ற இயக்கங்களையும் வாலிபர் சங்கத்தினர் வெற்றிகரமாக நடத்தினர். மேலும் மதுரை, சென்னை, புதுக் கோட்டை, உளுந்தூர்பேட்டை, சேலம், சிவகங்கை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இவ்வியக்கங்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத், வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆர்.வேல்முருகன், இல.சண்முகசுந்தரம், எஸ்.பாலா, லெனின், ஜா.நரசிம்மன், என்.முத்துராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்போராட்டங்களில் பங்கேற்ற வாலிபர் சங்க ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சங்கத்தின் மாநிலத் தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, எஸ்.கண்ணன் ஆகியோர், தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை எத்தனை எத்தனை வடிவங்களில் உள்ளது என்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
டிசம்பர் 30ம்தேதி நாகை, சத்தியமங்கலத்திலும், ஜனவரியில் புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களிலும் நேரடி நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
திங்கள், 11 ஜனவரி, 2010
தீண்டாமையை கடைப்பிடிக்கும் சலூன்கடைக்கு எதிர்ப்பு
லேபிள்கள்:
கொடுவாய்,
கோவை,
சலூன்கடை,
திருப்பூர்,
வாலிபர் சங்கம்,
விருதுநகர்