மதுரை
மதுரை மாநகரில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்திடக்கோரியும், வடிவேல்கரை தலித் இளைஞர் முருகன் மீது போடப்பட்ட பொய்வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் காளவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் தலைவர் வை.ஸ்டாலின் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை அமைப்பாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், இரா.இராசகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
மதுரை கிழக்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் என்.நன்மாறன், வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.பாலா, மாநகர் மாவட்டச் செயலாளர் ஜா.நரசிம்மன், புறநகர் மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் என்.கல்பனா, மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணக்குமார், ஜான்சி ஆகியோர் கண்டன உரையாற்றினர். புறநகர் மாவட்டச்செயலாளர் எம்.கண்ணன் நன்றி கூறினார்.
இரட்டைக்குவளை முறையை விளக்கும் வகையில் சிரட்டையில் டீ தருவது போல வாலிபர் சங்கத்தினர் சித்தரிப்பு செய்திருந்தனர். முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தேனி
வெண்மணி நினைவு தினத்தை முன்னிட்டு வீரபாண்டியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண் களுக்கு கழிப்பிட வசதி கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி பேரூராட்சி 10-வது வார்டில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக குடியிருந்து வருகின்றனர். அருகில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை இம்மக்கள் பயன்படுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அருந்ததிய மக்களுக்கு புதிய கழிப்பிட வசதி செய்து தரக்கோரி, வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மலைச்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் டி.வெங்கடேசன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர். காரல்மார்க்ஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் திலகவதி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத் தலைவர்கள் ஈ.தர்மர், த.நாகராஜ், அய்யங்காளை, காமுத்துரை, ஆர். பி.ராமர், விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
போராட்டத்தைத் தொடர்ந்து வீரபாண்டி காவல் சார்பு ஆய்வாளர் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் வாலிபர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்தில் இடத்தை தேர்வு கழிப்பறை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள தீண்டாமைக் கொடுமைகளை அகற்றிட உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஏ.சேகர் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எல்.முருகன் விளக்கிப் பேசினார். முடிவில் மாநில துணைச்செயலாளர் என்.முத்துராஜ் கண்டன உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் பி.மாரியப்பன், துணைச் செயலாளர்கள் எம்.தில்லை நாயகம், பாண்டியராஜன், பி.ராஜா, செல்வம், ஜெயக்குமார், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வீ.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை
குன்றாண்டார் கோயில், கந்தர்வக்கோட்டை, பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் உள்ள இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க வேண்டும், தலித் மக்களை ஆலயங்களுக்குள் அனுமதிக்க வேண்டும், கோவனூர் மற்றும் பல இடங்களில் உள்ள பொதுக்குளங்களில் தலித்துகள் குளிப்பதற்கு தடை விதிக்கும் ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.சங்கர், மாவட்ட நிர்வாகிகள் டி.அன்பழகன், ஆர்.எஸ்.அலெக்ஸ்பாண்டியன், எஸ்.பெருமாள், எஸ்.பக்ருதீன், ஒன்றிய நிர்வாகிகள் ராமநாதன், பேரின்பநாதன், நாகராஜன், சுப்பிரமணியன், பழனிச்சாமி, தினேஷ்குமார், ராஜா, புண்ணிய மூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.
திங்கள், 11 ஜனவரி, 2010
தலித் உரிமைகளை மீட்பதற்கான வாலிபர்களின் போராட்டக் களம்
லேபிள்கள்:
தீண்டாமை,
தேனி,
புதுக்கோட்டை,
மதுரை,
வாலிபர் சங்கம்,
விருதுநகர்