வெண்மணி தியாகிகள் நினைவு தினமான டிசம்பர்25 அன்று தீண்டாமைக்கு எதி ராக 31 இடங்களில் ஆலய நுழைவு உள்ளிட்ட நேரடி நடவடிக்கைகளில் ஈடு படப்போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் அறிவித்தார்.
இது தொடர்பாக 23.12.09 அன்று சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:
தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆலயங்களுக்குள் செல்லத் தடை, திருவிழாவில் பங்கேற்கத் தடை, தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை, பொதுப்பாதையில் நடக்கத் தடை, செருப் பணிந்து நடக்கத் தடை, குளத்தில் குளிக்கத் தடை, குடிநீர் எடுக்கத் தடை, பொதுக்கடையில் முடிவெட்டிக் கொள்ள தடை, சைக்கிளில் செல்லத் தடை, மயானப் பாதையில் செல்ல தடை, மயானத்திற்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பு என எண்ணற்ற வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. நகரங்களில் கூட வாடகை வீடு பெறுவது இயலாததாக இருக்கிறது.
ஆகவே, மாநில அரசு தீண்டாமையை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பொது நடவடிக்கைகளிலும் தலித் மக்களை அனுமதிக்க வேண்டும். வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் முழுமையாக அமலாக்க வேண்டும். சிறப்பு உட்கூறு திட்ட நிதியை முழுமையாக செலவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
44 விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்ட வெண்மணி நினைவு நாளான டிசம்பர் 25 அன்று 21 இடங்களில் நேரடி நடவடிக்கையும், 10 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை ஈஸ்வரன்கோவில் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபுவும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கோவனூர் பகுதிகளில் பொதுக்குளத்தில் குளிக்கும் போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.கண்ணனும், திருப்பூர் வேலம்பாளையத்தில் மயானத்திற்கு பாதை கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு பொருளாளர் எஸ்.முத்துக்கண்ணனும் தலைமை தாங்குகின்றனர்.
மதுரை ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், வடசென்னையில் எஸ்.கே. மகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஆலய நுழைவு போராட்டம், மயான ஆக்கிரமிப்பை அகற்றுதல், செருப்பணிந்து செல்லுதல், பொதுக்குளத்தில் தண்ணீர் எடுத்தல், அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கடையில் சென்று முடிவெட்ட கோருவது, கழிப்பிடத்திற்குள் செல்வது, மாநகராட்சி சமூக நலக்கூடத்தை திறந்து விடுதல் என போராட்டங்கள் நடைபெறுகின்றன.
ஈரோடு மாவட்டம் நசியனூர், தொகுப்பு வீடு கட்ட ஒதுக்கிய தொகையை திருப்பி அனுப்பிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்தும், சுடுகாடு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது.
இவ்வாறு எஸ்.கண்ணன் கூறினார்.
இச்செய்தியாளர் சந்திப்பின் போது மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.
செவ்வாய், 5 ஜனவரி, 2010
டிச.25 அன்று தமிழகம் முழுவதும் 31 மையங்களில் தீண்டாமைக்கு எதிராக நேரடி நடவடிக்கை வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தகவல்
லேபிள்கள்:
எஸ்.கண்ணன்,
டிசம்பர் 25,
தீண்டாமை,
நேரடி நடவடிக்கை,
வாலிபர் சங்கம்