செவ்வாய், 5 ஜனவரி, 2010

நெறிக் குறவர்களுக்கு பட்டா வேண்டும் - ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் நெறிக்குறவர்களின் வசிப்பிடங்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மா.சந் திரசேகரனிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.

மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், நெறிக்குறவர் சமூக மாவட்ட அமைப்பாளர் நாகூரான் ஆகியோர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, இடும்பாவனம், நீடாமங்கலம், பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான நலவாரியமும் செயல்பட்டு வருகின்றது. ஆனாலும், இவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது.

மேலும், நீண்ட காலமாக மாவட்டத்தில் பரவலாக வசித்து வரும் இவர்களுக்கு இலவச மனையோ, மனைப்பட்டாவோ இன்றுவரை வழங்கப்படவில்லை. இம்மக்கள் இதுகுறித்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

எனவே, இவர்களுக்கு குடிமனைப்பட்டா, தொழில்புரிந்திட கூடுதல் கடனுதவி போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)