செவ்வாய், 5 ஜனவரி, 2010

மலிவான விளம்பரம் தேடும் முதல்வர்: இரா.அதியமான் குற்றச்சாட்டு

கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையம், டிசம்பர் 20-ம் தேதி தொடங்கப்பட்டது.

இம்மையத்தின் தொடக்க விழாவுக்கு காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோவைப் பகுதி பொதுச் செயலாளர் வி.சுரேஷ் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள் வரவேற்றார். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், மையத்தை வாழ்த்தி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் பேசியதாவது:

அருந்ததியர் மக்களின் 25 ஆண்டுகாலப் போராட்டம், அருந்ததிய ஜனநாயக இயக்கங்களின் குரல், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்குப் பின்னரே அருந்ததிய மக்களுக்கு உள்இட ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால், வள்ளுவர் கோட்ட விழாவில் பேசிய முதல்வர் தன்னிடம் தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகக் கூறுகிறார். அவர் சொன்னதுபோல் வலசை ரவிச்சந்திரனோ, துணை சபாநாயகர் துரைசாமியோ கோரிக்கை வைக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதியமானோ, ஜக்கையனோ கோரிக்கை வைக்கவில்லையா? முதல்வர் இப்படிப் பேசியதன் மூலம் அருந்ததிய மக்கள் முகத்தில் கரிபூசிவிட்டார். எங்களுக்கு சலுகையோ பிச்சையோ தேவையில்லை. எங்கள் உரிமைகளைத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.

மத்திய அரசின் தலித் சிறப்பு உட்கூறுத்திட்ட நிதியைத் தாருங்கள் என்கிறோம். ஆனால், ’பெண்சிங்கம்’ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதால் கிடைத்த ரூ. 66 லட்சத்தை அருந்ததிய மாணவர்களுக்கு ஆளுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கிறார். இதனால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? மருத்துவப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஐந்தாயிரம் எல்லாம் பாக்கெட் மணிதானே? எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? அரசாங்க பணத்தை. மக்கள் வரிப்பணத்தை வழங்க வேண்டியதுதானே? எங்களை ஏன் கொச்சைப் படுத்துகிறீர்கள்?

திருச்செந்தூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உள் ஒதுக்கீடு சரியாக அமலாக வில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்.வரதராஜன் குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நீண்டகாலமாக இருந்த கோரிக்கையை நிறைவேற்றினேன் என்றார். பிறகு எப்படி வள்ளுவர் கோட்டத்தில் மட்டும், நானே கோரிக்கை வைத்து நிறைவேற்றி னேன் என்கிறார். சிலர்கூறுவது போல் மற்ற கட்சிகளின் ஆதிதிராவிடர் நலப்பிரிவு அல்ல தீண்டாமை ஒழிப்பு முன்னணி. ஏனென்றால் மற்ற கட்சியின் பிரிவுகளில் அந்தந்த சாதியினரே தலைவர்களாக இருப்பார். இங்கு அனைத்து சமூகத்தவரும் தலைவர்களாக இருந்து குரல் கொடுப்பார்கள். அதை மிகச்சரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திக் காட்டுகிறது.

இவ்வாறு இரா.அதியமான் பேசினார்.

நிகழ்ச்சியில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே. சுவாமிநாதன், அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார், கோவை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் யு.கே.சிவஞானம், பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ் மற்றும் வழக்கறிஞர் வெண்மணி, பகுஜன் சமாஜ் கட்சி யின் மாநிலச் செயலாளர் இராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிற்சி மையத்திற்கு தலித்முரசு பத்திரிகை விற்பனையாளர் வேணுகோபால் ரூ. ஆயிரம் நிதி வழங்கினார்.