இராஜபாளையம் அருகே அருந்ததியர் மக் களுக்கு முடிதிருத்தம் செய்ய, சாதி ஆதிக்க வெறியர்கள் விதித்திருந்த தடை உடைக் கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், புதனன்று முதன் முறையாக அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்யப்பட் டது.
இராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய சாதி ஆதிக்கவெறியர்கள் தடை விதித்திருந்தனர். இதை எதிர்த்து, அக்கிராமத்தில் நடைபெற்ற- ஊர்ப்பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.முத்துராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், தீண்டாமை கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடு படுவது என்று முடிவு செய்யப்பட்டு, அதைத்தொடர்ந்து, முதற்கட்டமாக வட்டாட்சியர் காளிமுத்துவிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறை அலுவலர் விசாரணை செய்ததில், அருந்ததியர் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது உண்மைதான் என்று ஊர்ஜிதம் செய்யப்பட் டது.
ஆகவே, 21-12-2009 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சவரத் தொழிலாளி தமிழரசன், வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் கார்த்திகைசாமி, அருந்ததியர் மக்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் முடிதிருத்தும் தொழிலாளி தமிழரசன் அன்றைய தினமே அருந்த தியர்களுக்கு முடிதிருத்த எழுத்துப் பூர்வமாக சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில் தலித்மக்கள் முடிதிருத்தத்திற்காக காத்திருந்தபோது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், சவரத் தொழிலாளி தமிழரசனுக்கு அதிக அளவில் மதுவை வாங்கிக் கொடுத்து, அவரை நிதானமற்ற நிலையில், தலித் மக்கள் முன்பாக நிறுத்தி, இனி எப்படி முடிவெட்டுறீங்கன்னு பாப்போம்டா... என ஆதிக்க வெறியோடு கூறிவிட்டு சென்றார்.
ஏற்கனவே, வேலுச்சாமி அன்று காலை தலித்மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்து சாதியைச் சொல்லி திட்டியதோடு, புகார் மனுவைத் திரும்பப்பெற வேண்டும் என மிரட்டிச் சென்றுள்ளார்.
எனவே, போராட்டக் குழுவினர் வேலுச்சாமியை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும், சமாதான உடன்பாட்டை மீறிய தமிழரசன் மீதும் தனித் தனியாக புகார் அளித்தனர்.
இதன்பின் தமிழரசன் இரவு 9 மணியளவில், காவல் நிலையத்தில் வைத்து முடிவெட்ட சம்மதம் தெரிவித்தார். அதன்படி முனியாண்டி என்ற அருந்ததியருக்கு முடிதிருத்தம் செய்தார். பல வருடங்களாக உரிமை மறுக்கப்பட்ட தலித் மக்களுக்கு வாலிபர் சங்கம் நடத்திய போராட்டம் மூலம் உரிமை கிடைத்ததால் அருந்ததியர் மக்கள் மகிழ்ந்தனர்.
வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எல்.முருகன், மாவட்டப் பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சசிக்குமார், ஜெயக்குமார், ஊர் நாட்டாமை கருப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜி.கணேசன், சண்முகவேல், முனியாண்டி, அம்மமுத்து, மாரிமுத்து ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
செவ்வாய், 5 ஜனவரி, 2010
வாலிபர் சங்கப் போராட்டத்தால் அருந்ததியருக்கு முடிவெட்டப்பட்டது
லேபிள்கள்:
இராஜபாளையம்,
போராட்டம்,
முடிதிருத்தம்,
வாலிபர் சங்கம்,
வெற்றி