செவ்வாய், 5 ஜனவரி, 2010

அலட்சியம் செய்யப்படும் ஆதிதிராவிட மாணவர்கள் - தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வில் அம்பலம்


ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்டது ஆதம்பாக்கம். இங்குள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்ளது திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளி 1956ம் ஆண்டு நடராஜன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கிராம நத்தம் ஊர்ப் புறம்போக்கில், சுமார் 10 கிரவுண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. எனினும் முறையாக பராமரிக்கப்படாததால் பாழடைந்து கிடக்கிறது.

1200 மாணவர்கள், 32 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்தப் பள்ளியில் தற்போது 133 மாணவர்களும், 6 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் ஆதிதிராவிடர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பள்ளி தொடங்கப்பட்டது முதல் அரசு உதவிபெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 20 வருடங்கள் வரை பள்ளியை பராமரித்து வந்த நடராஜன், 1977ம் ஆண்டு பெரம்பூரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவருக்கு பள்ளி நிர்வாகத்தை மாற்றிக் கொடுத்தார். 15 வருடங்கள் பள்ளியை நடத்தி வந்த ஜார்ஜ் மறைந்தார். இதன்பின்னர் அந்த பள்ளி உதவி கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.

இந்நிலையில் 1995-ம் ஆண்டு கே.பி.வித்யாதரன்-பழனிமுத்து ஆகியோர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் பள்ளியை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

“இந்த பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் வித்யாதரன் மேற்கொள்ளவில்லை. 2004-ம் ஆண்டு பள்ளியில் கட்டிடம் கட்ட ஆலந்தூர் நகராட்சி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனை வித்யாதரன் ஏற்க மறுத்துவிட்டார்.

பள்ளியை மூடிவிட்டு அந்த இடத்தை விற்பதற்கு வித்யாதரன் மறைமுகமாக முயற்சி மேற்கொண்டார். அதற்காக சில கட்டிடங்களை புதிதாக கட்டப்போவதாக கூறி இடித்தனர். ஆனால் கட்டிடம் எதுவும் கட்டவில்லை. வேறு சில முறைகேடுகளிலும் வித்யாதரன் ஈடுபட்டார். அவர் மீது பொது மக்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து அதி காரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் மீது அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க முயற்சித்தனர்.

இந்நிலையில், 2007 ஏப்ரல் 11-ம் தேதி பள்ளி நிர்வாகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எத்திராஜனிடம் சென்றது. இவரும் பள்ளியை தரம் உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காத நிலைதான் உள்ளது என்று சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே. பாலச்சந்தர் கூறினார்.


இந்தச்சூழ்நிலையில் அந்தப் பள்ளியை 22.12.2009 அன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் பி.சம்பத் ஆய்வு செய்தார். இந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை, அவரிடம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களும், பொதுமக்களும் கொடுத்தனர்.

“எத்திராஜன் பொறுப்பேற்ற பிறகும் புதிதாக கட்டிடம் கட்டவில்லை. தற்போது உள்ள ஓடு போட்ட ஷெட்டுகளும் மழை பெய்தால் ஒழுகுகிறது. தலைமை ஆசிரியருக்கு கூட தனி அறை இல்லை. சத்துணவு சாப்பாடு செய்யவோ, அரிசி பருப்புகளை வைக்கவோ தனித்தனி அறைகள் கிடையாது. ஆசிரியர்கள் உட்கார ஊர் மக்கள் சார்பில் நாற்காலிகள் வாங்கி கொடுத்தோம்.

சிறு மழை பெய்தால் கூட பள்ளிக்குள் வெள்ளம் வந்துவிடும்; அருகாமையில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள் பள்ளிக்குள் வந்துவிடுகிறது. மழைக்காலங்களில் குட்டையாக காட்சி அளிக்கும் பள்ளிக்கூட மைதானத்திற்கு ஊர்மக்கள் சேர்ந்து, அவ்வப்போது மண் கொட்டி சிறிது மேடாக்கி வைத் திருக்கிறோம். பள்ளிக்கென்று ஒரு காவலாளியும் கிடையாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு கையூட்டு பெற்றுக் கொண்டு புதிதாக இரண்டு ஆசிரியர்களை எத்திராஜன் நியமித்தார். அதனை மாவட்ட கல்வி அதிகாரி ஏற்கவில்லை. ஆகையால், பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்து தலா 5 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்.

இந்த பள்ளியின் எல்லைக்கு உட்பட்டு 9 ஆயிரம் மக்களை கொண்ட 2371 குடும் பங்கள் உள்ளன. இவர்களில் குறைந்தது 2 ஆயிரம் பேராவது மாணவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்கள் நன்றாக கற்பித்தாலும், குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள்.

கடந்த 25 வருடமாகவே பள்ளி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகிறார்கள்; ஆய்வு செய்கிறார்கள். இந்த மாதம் 18ம் தேதி கூட ஆண்டு ஆய்வு நடந்தது. ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை. பள்ளி இருக்க இருக்க தரம் தாழ்ந்துகொண்டேதான் செல்கிறது.

இந்த பள்ளியை அரசு ஏற்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இறையன்பு அப்போது பரிந்துரைத்தார். ஆனால் அரசு மெத்தனமாக உள்ளது. இந்த பள்ளி உருப்பட ஒரே தீர்வு அதை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான்.

பள்ளியைச் சூறையாட மறைமுக முயற்சிகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும் இவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

பின்னர் அவர்களிடம் பேசிய பி.சம்பத், இந்த பிரச்சனையை முன்னுரிமை கொடுத்து கவனிப்பதாவும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உறுதி அளித்தார்.

இந்த ஆய்வின்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிபிஎம் நிர்வாகிகள் இளம்வழுதி, ரங்கன், வாலிபர் சங்கத் தலைவர்கள் கே.ஏ.சந்தோஷ், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.