1968 டிசம்பர் 25. எத்தனை ஆண்டுகளாயினும் எண்ணுந்தோறும் நெஞ்சம் கொதிக்கும் வெங்கொடுமை நடந்த நாள். அன்றுதான் கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் ஒரு குடிசை வெந்து தணிந்தது. அதனுள்ளே இருந்த 44 மனித உயிர்கள் உடல்கருகி செத்து மடிந்தன. ஆண்டைகளின் அடியாள் கூட்டம் போலீஸ் துணையோடு குடிசையைக் கொளுத்திக் கொல்லிக்கட்டைகளாய் கோரக் கூத்தாடி குதித்தது. தமிழகம் வெட்கித் தலைகுனிந்து வெதும்பி நின்றது.
ஆண்டவன் அருளிய வேதங்களின் வழியாய், ‘புனிதம்’ பெற்று வந்த வருணாசிரமத்தின் கடைநிலை மக்கள் தீண்டவும் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டார்கள். அந்த மக்கள் தஞ்சைத்தரணியில் உழவுப் பணி செய்யும் கூலிக்கூட்டத்தவர்கள். எத்தனையோ தலைமுறை முடிந்தபிறகும் முடிவுறாத இந்தத் தீண்டாமைத் தீமைக்கு எதிரான கலகக்கொடியை கம்யூனிஸ்டுகள் உயர்த்தினார்கள்.
அடிமைத்தனத்தை உடன்பிறப்பாய் கருதி அதற்கு உடன்பட உதிரத்தில் ஏற்றப்பட்ட அந்த மக்களுக்கு, செங்கொடி புதுப்பார்வை யைத் தந்தது. பிறப்பால் ஏற்றத்தாழ்வும், இழிவும் கற்பிப்பதைக் காரித்துப்பச் சொன்னது செங்கொடி. அந்த மக்களை அணிதிரட்டும் அரும்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பி. சீனிவாசராவ் என்ற செஞ்சட்டைப் போராளி, “ உன்னை அடித்தால் திருப்பி அடி” என்று அவர்களது அடிமைத்தன உதிரத்தை எதிர்திசையில் பாயவைத்தார். காலில் செருப்பணிவது, தோளில் துண்டு போடுவது என்று ஒவ்வொரு தீண்டாமை வடிவத்திற்கும் முடிவுரை எழுதப்பட்டது.
ஒன்றுபட்ட உறுதிகொண்ட வலிய படையாய் அந்த மக்களை மாற்றிட விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டது.
அந்த மக்களை அடக்கி, ஒடுக்கி, சாட்டையை சொடுக்கி இன்பந்துய்த்து வந்த மிராசுக்கூட்டத்திற்கும், ஜாதி வெறியர்களுக்கும் இந்த பரிணாம வளர்ச்சி வயிற்றைக் கலக்கியது. இந்த மக்களுக்கும், சங்கத்திற்கும், செங்கொடிக்கும் எதிராய் கொடிய வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. எண்ணற்ற தோழர்கள் காயம்பட்டார்கள், களப்பலியானார்கள். எனினும் இழப்பதற்கு இழிவைத்தவிர வேறேதுமற்ற அந்த இரும்புநிறக்கூட்டம் உருக்கு நிகர் உறுதியைக் காட்டியது.
உழுபவனுக்கு நிலம் வேண்டும், உழைப்பதற்கு நியாயக்கூலி வேண்டும், பண்ணையடிமை முறை மாற வேண்டும் என முழங்கிய இந்த மக்களின் வீராவேசம் தஞ்சையை உலுக்கியது.
எப்படியும் இந்த மக்களை ஒடுக்கியே தீருவது என்று கங்கணங்கட்டிக் கொண்ட மிராசுகளின் கூட்டம் தங்களுக்கு என நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டது.
1968ல் கூலி உயர்வுக்கான போராட்டம் சூடுபிடித்த போது இறுதியில், நாள் கூலியாக அரைப்படி நெல் அதிகம் வேண்டும் என வேண்டப்பட்டது. அரைப்படி என்ன, 6 படி கூட உயர்வு தரத்தயார், ஆனால் செங்கொடியை இறக்கிவிட்டு, எமது சங்கத்தின் மஞ்சள் கொடிகளை ஊர்களில் பறக்கவிட வேண்டும் என்று மிராசுகள் கொக்கரித்தார்கள். கூலி உயர்வைக் கொட்டிக்கொடுத்தாலும் எங்களின் செங்கொடியை தாழ்த்தும் பேச்சிற்கே இடமில்லை என்று வியர்வைக்கூட்டம் நச்சென்று பதிலுரைத்தது.
அந்த வகையான ஒரு கிராமம்தான் கீழ் வெண்மணி. மிராசுகளின் தலைவன் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் பண்ணைக் கருகில் இருந்த தலித் குடியிருப்பு.
1968 டிசம்பர் 25 இரவு அடியாள் கூட்டம் எதிர்பாராத தருணத்தில் திடீர்தாக்குதலை நடத்தி 44 மனித உயிர்களை உயிரோடு சாம்பலாக்கியது.
ஆண்டாண்டு காலமாய் அடங்கிக்கிடந்தவர்கள் உரிமை வேட்கை கொண்டால், ஆண்டைகள் கூட்டமும், அவர் சார்பாய் ஆளுங் கூட்டமும் என்னவெல்லாம் ஊழிக் கூத்தாடுவார்கள் என்பதற்கு வெண்மணியில் வெந்து மடிந்த மக்கள் சான்றாக இருக்கிறார்கள்...
எத்தனைக் கொடுமைகள் இழைத்தபோதும், கண்மணிகள் பலர் களப்பலியான போதும் செங்கொடியேந்திய வீரப்புதல்வர்களின் உறுதிகுலையாது என்பதற்கும் அந்த வெண்மணிதான் சான்று. இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தார்களே தவிர, உரிமைப்போராளிகள் உறுதிபட முன்னேறியே வருகின்றனர்.
தலித் மக்களை ஒரு தலித் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று, அந்த மக்களுக்கு அரசியலிலும் தனிச்சேரி அமைக்கும் முயற்சி நடக்கிறது. ஜாதி அடையாளத்தோடு தலையெடுக்கும் அமைப்புகளுக்கு உண்மை பலம் வராது. சமூக ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் ஜனநாயக எண்ணங்கொண்ட எல்லா மக்களையும் இணைத்துத்தான் தீண்டாமை போன்ற கொடுமைகளை ஒழிக்க முடி யும். தஞ்சையில் தலித் மக்களை எழுச்சியூட்டி எதிர்வினையாற்றச் செய்தவர்கள் பிறப்பால் தலித்துகள் மட்டும் அல்ல. நிலம்,கூலி, மரியாதை என அங்கே சாதிக்கப்பட்டவை வேறு எங்கும் சாதிக்கப்படவும் இல்லை.
உழைப்பவர் யாவரும் ஓர் குலம் என்று முழங்கி தமிழகத் தொழிலாளி வர்க்கம் கீழ் வெண்மணி தியாக திருப்பூமியில் ஒரு கம்பீரமான நினைவாலயத்தை எழுப்பி வருகிறது. முற்றிலும் கருங்கற்களால் இந்த நினைவாலயம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் ஒரு செங்கல்கூட இருக்காது.
இந்த நினைவாலயத்தை எழுப்பத் தொடங்கிய போது செய்யப்பட்ட மண் பரிசோதனை எங்களைத் துணுக்குற செய்தது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஆற்று நீர்பாய்ந்த இந்த பூமியில் 55 அடி ஆழம் வரை மண் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கிறது. எனவே 55 அடி ஆழத்திலிருந்து 110 கான்கிரீட் தூண்களை தரைக்குக்கொண்டுவந்து அதன் மீதுதான் நமது நினைவாலயம் எழுகிறது. இதுவரை மண்ணுக்குக் கீழேயே எமது திட்டத்தில் பாதிக்கு மேல் செலவாகிவிட்டது. உயிர் கொடுத்து உரிமைப் பயிர் விளைவித்த அந்த செம்புலத்தில் நாம் எண்ணியதை எண் ணியபடி செய்து முடித்தாக வேண்டுமல்லவா? இதற்குப் பணம் ஒரு தடையாகலாமோ?
சிஐடியு சங்கங்களும், சம்மேளனங்களும், அரசு ஊழியர் சங்கமும், எல்ஐசி, பிஎஸ்என்எல், ஆசிரியர், வங்கி போன்ற அரங்கங்களின் தொழிற்சங்க அமைப்புகளும் அளித்த நன்கொடையில் வேலைகள் நடக்கின்றன. மேலும் பணம் வேண்டும் எனக்கூறியவுடன் அரசுப்போக்குவரத்து சம்மேளனம் கல்தானம் என்று ரூ. 6 லட்சத்தை கோட்டாவிற்கு மேல் அள்ளித்தந்தது. தருமபுரி, திருவண்ணாமலை போன்ற சிறிய மாவட்டங்கள் கூட இலக்கைத்தாண்டி தந்துள்ளன. திருப்பூரில் ஆர்.ஈஸ்வரன் என்ற தோழர் தனது பணிக்கொடை பணமான ரூ. 50 ஆயிரத்தை தந்து மகிழ்ந்தார். இப்படி தனிநபர் பட்டியலும் மிகப் பெரியது.
ரூ. 5000 வழங்குவோரின் பெயர் வெண்மணியில் கல்வெட்டில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட பிறகு பலர் பணம் அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு சங்கமும், போக்குவரத்தில் ஒவ்வொரு பணிமனையும், மின்சாரத்தில் ஒவ்வொரு கிளையும் ரூ. 5000 செலுத்தவும், கல்வெட்டில் இடம்பெறவும் முடிவு செய்துள்ளன.
திருப்பூரைச் சேர்ந்த ஜி.எம்.லோகநாதன், ஆர்.ஆறுமுகம் ஆகிய இரண்டு தோழர்கள் மட்டும் முகப்புக் கதவைத் தங்களின் சொந்த செலவில் செய்து தருகிறார்கள். இந்த முகப்புக் கதவின் செலவு மட்டும் ரூ. 2 லட்சம். இந்த வர்க்க உணர்வை எந்த வார்த்தைகளில் பாராட்டுவது? இதைப்போலவே இதர ஜன்னல்கள், கதவுகளைத் தர பலர் முன்வர வேண்டும்.
2010, மே 30 சிஐடியுவின் 40-வது அமைப்பு தினம் ஆகும். இந்த 40-வது அமைப்பு தினத்தில் வெண்மணி நினைவாலய கட்டிடத்தின் திறப்பு விழாவை தமிழகத் தொழிலாளர்களும், விவசாயிகளும், இடதுசாரி போராளிகளும் இணைந்து நடத்தப்போகிறோம்.
வெண்மணி நினைவாலய மலர் ஒன்று வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரங்களை நிறைவு செய்ய ஒவ்வொருவரும் உதவ வேண்டும்.
இந்த நினைவாலயத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பல நாட்கள் தங்கி பயிற்சி பெறும் முகாம்கள் நடத்திட, இங்கே தமிழக உழைப்பாளி வர்க்கம் சந்தித்த இதர போர்க்களங்களைப் பற்றி ஆய்விற்கான ஏற்பாடுகளைச் செய்திட,
தீண்டாமைக் கொடுமைகளின் கோர வடிவங்களை இந்தத் தலைமுறை அறியத்தக்க சித்திரக்கூடம் உருவாக்கிட,
உழைக்கும் வர்க்க கலைப்பட்டறைகளின் களமாக இதை மாற்றிட,
நினைவாலயப்பகுதி முழுவதும் சோலையாகவும், தோப்பாகவும் பொலிவு பெற்றிட,
மக்கள் வந்து செல்லும் தலமாய் தனிப்புகழ் எய்திட,
பெரும் கட்டமைப்பு வசதிகளை இங்கே உருவாக்க வேண்டியுள்ளது.
தொழிலாளர் - விவசாயிகளின் ஒற்றுமைத் தேர் வர்க்கப் போர் களத்தில் முன்னேறட்டும்!
இந்த ஆண்டு வெண்மணித் தியாகிகளின் நினைவை நிதி வழங்கிப் போற்றிடுவோம்! கம்பீரமாய் நினைவாலயம் கட்டி முடித்திடுவோம்! வெண்மணித் தியாகிகள் புகழ் நின்று நிலைக்கட்டும்!
கட்டுரையாளர் : பொதுச்செயலாளர்,
சிஐடியு, தமிழ்நாடு மாநிலக்குழு
செவ்வாய், 5 ஜனவரி, 2010
வெண்மணித் தியாகிகள் புகழ் நிலைக்கட்டும் ! - அ.சவுந்தரராசன்
லேபிள்கள்:
அ.சவுந்தரராசன்,
சிஐடியு,
தீண்டாமை,
நினைவாலயம்,
வெண்மணி