மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் எல்.கே.பி. நகர் பகுதியில் காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சாட்டையடித்தும், குறிசொல்லியும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் குடும்ப அட்டை வேண்டி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு முன்னர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி அட்டை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால், ஓராண்டு காலமாகியும் ஒருவருக்குக் கூட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் சாதிச்சான்றிதழ் வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.
இதையடுத்து, குடும்ப அட்டை, சாதிச்சான்று வழங்கக்கோரி, சக்கி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், காட்டுநாயக்கன், சோழகர், ஆதியன் சமூக மக்கள் காலை 10.30 மணிக்கு பூம்பூம் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எனினும் காலை 11.45 மணி வரை கிராம நிர்வாக அலுவலகத்தை அதிகாரிகள் திறக்கவில்லை.
போராட்டம் குறித்து எல்லப்பன் என்பவர் கூறுகையில், சாதிச்சான்று தர கலெக்டர் மறுப்பதால், எங்கள் சமூக குழந்தைகள் படிப்பைத் தொடர முடியாமல் சாட்டையடித் தொழிலுக்கு செல்கின்றனர். குறிசொல்லி பிழைப்பு நடத்துகின்றனர். நாங்கள் பிச்சை எடுப்பதாகக் கூறி எங்களை இழிவுபடுத்துகிறார்கள். சாதிச்சான்றிதழ் கொடுத்தால் எங்கள் குழந்தைகள் உயர்கல்விக்குச் செல்வார்கள். ஏனவே சாதிச்சான்றிதழ், ரேசன் அட்டை வழங்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். சேகர், பசுபதி, முருகன், மணிமேகலை, சுமதி, அய்யுரு, கருப்பசாமி ஆகியோர் பேசினர்.
-(21.12.2009 அன்று செய்தியானது)
செவ்வாய், 5 ஜனவரி, 2010
மதுரையில் சிபிஎம் தலைமையில் பழங்குடி மக்கள் போராட்டம்
லேபிள்கள்:
ஆதியன்,
காட்டுநாயக்கன்,
சாதிச்சான்றிதழ்,
சிபிஎம்,
சோழகர்,
மதுரை