செவ்வாய், 5 ஜனவரி, 2010

டிச.30 - மாத்தூரில் கோயில் நுழைவுப் போராட்டம்- வாலிபர் சங்கம் அறிவித்தது

செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழையும் உரிமை தலித் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என்றும், மீறினால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் என்று தலித் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் களஆய்வில் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

இத்தகவலை மனு மூலமாகத் தமிழக முதல்வர் நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு, நாகை மாவட்டத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

வாலிபர் சங்க நாகை மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் ஏ.ரவிச்சந்திரன், பி.ஏ.ஜி.சந்திரசேகரன், கே.பி.காரல் மார்க்ஸ், வி.எம்.சரவணன், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செம்பனார்கோயில் ஒன்றியம், மாத்தூரில், டிசம்பர் 13ம் தேதி தலித் மக்களின் நிலை யைப் பற்றி களஆய்வு செய்தனர்.

அதன் நிறைவில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

மாத்தூரில் உள்ள மாரியம்மன் கோயில், மிகப்பழமையான ஒன்றாகும். 1998-ஆம் ஆண்டு இது புதுப்பிக்கப்பட்டது. சாதி இந்துக்களும், தலித் மக்களும் கோயிலுக்கு நிதி கொடுத்து வருகின்றனர். ஆனால், தலித் மக்களுக்கு கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும் உரிமை மட்டும் நெடுங்காலமாய் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை மீறினால் சாதி இந்துக்களினால் பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தீ மிதி நிகழ்ச்சிகளுக்காக, வீதிகளைச் சுத்தம் செய்தல், தீ மிதிக்கான மரம் வெட்டுதல், திருவிழாக்காலங்களில் விளக்குகளைத் தூக்குதல் போன்ற வேலைகளுக்கு மட்டும் தலித் மக்களை, சாதி இந்துக்கள் பயன்படுத்து கின்றனர். ஆனால், கோயிலுக்குள் செல்லவோ, தீ மிதிக்கவோ தலித்துகளுக்கு உரிமை இல்லை.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மாத்தூரில், எவ்வித அச்சமும் இடர்பாடும் இல்லாமல் தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை விரைவில் பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டது.

மேலும், டிசம்பர் 30 அன்று மாத்தூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

-(21.12.2009 அன்று செய்தியானது)