செவ்வாய், 5 ஜனவரி, 2010

சாதிய மனோபாவத்தில் காவல்துறை நெல்லை ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார்


சாதிய உள்நோக்கத்துடன் 3 கிராம தலித் மக்கள் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவதைக் கண்டித்து, நெல்லையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் வீ.பழனி தலைமையில் மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :

தச்சநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மேலக்கரை, அழகநேரி, சத்திரம்புதுக்குளம் ஆகிய கிராமங்களில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில குற்றச் சம்பவங்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தச்சநல்லூர் போலீசார் சாதிய உணர்வோடு உள்நோக்கம் கொண்டும், தலித் மக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நியாயம் வழங்க வேண்டும்

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தியாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.ஸ்ரீராம், தி.சந்திரசேகரன் மற்றும் கு.பழனி, வண்ணமுத்து உள்பட ஏராளமானோர் மனு அளிப்பில் கலந்து கொண்டனர்.

-(22.12.2009 அன்று செய்தியானது)